கிருஷ்ணார்ப்பணம்
கண்ணா!
இன்றுனைக் காணேனோ!
பவளவாய் மன்னா,
கண்டுன் தாழ் பணியேனோ!
விண்ணேறிச் சென்றாய் விண்ணவர்க்கு விருந்தானாய்!
மண்ணோரை மறந்தனையோ,
மன்னவனே எம் பிழையெதுவோ?
வேடனம்பில் பிணிபட்டாய்,
வேடம் களைந்தாய்,
விண் சென்றாய்,
தீரா விளையாட்டுடையோனே!
பொல்லாங்கு வெள்ளமெனப்
போந்த போதெல்லாம்,
நல்லாங்கு தான் செய்ய வந்துதிப்பாய்!
சூழும் கருவானில்
கீறிப் பிளந்து வந்த
மின்னொத்தாய்!
நிலவுலகில் பிறவி கொண்ட
எவ்யிர்க்கும்
கண்ணொத்தாய்!
தாயொத்தாய்
தந்தையும் ஒத்தோனே!
பிணி தந்து என்னைப்
பணி கொண்டாய்!
இனியாவது நிகழ்வதொன்றும் அறியேனே!
உண்ணும் சோறும் நீயென்பேன்!உறக்கத்தில் சுகமும் நீயென்பேன்!
கன்னியின் துவர்வாய் மயக்கத்தில்
களித்துக் கிடந்த பொழுதினில்!
சுழித்து எழுந்த உணர்வே
உணர்விடை தெளிந்த அறிவே!
வாழ்வும் தாழ்வும் நீ தந்தாய்,
அதனால்,
என் வாழ்வே என்றும்
கிருஷ்ணார்ப்பணம்!
No comments:
Post a Comment